கண்ணீர் நினைவுகள்

உனக்கு ஞாபகம் வருகிறதா நண்பனே...
சிறுவயதில் ஒழுகும் மூக்கை
சட்டைக் காலரில் துடைத்தும் துடைக்காமலும்
அரைஞாண் கயிற்றுக்கு அடங்காத
அரைக்கால் சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டே
காடுமேடாக அலைந்து திரிந்த
நாட்களெல்லாம்...
ஏனெனில் காலத்தின்
இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டு
வீல் சேரில் அமர்த்தப்பட்ட
எனக்கே வருகிறது சரம்சரமாக...
பிறிதொரு நாள்கூட
கற்பகமெனும் பெயர் செவியில் விழ
டக்கென்று தலை திருப்பிப் பார்த்தேன்
வேறெதற்கு நம்மை
வெளுவெளுவென வெளுத்த
கற்பகம் டீச்சரின் ஞாபகம்தான்...
கற்பகம் டீச்சர் ஞாபகத்திற்கு வந்தால்
கூடவே நீயும் வரத்தானே செய்வாய்
அத்தனை அடி வாங்கியிருக்கிறோம்.
நினைத்துப் பார்க்கையில்
அன்றைய வலி ஒவ்வொன்றும் இன்று
தேன் சொட்டுகளாய் விழுகிறது மனவெளியில்.
அன்றொரு நாள்
திருட்டு மாங்காய் ருசிக்க
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
என்னிடம் பேசிக்கொண்டே
சட்டையை ஒவ்வொரு பொத்தானாக
விடுவித்து
நீ வலது கையால் சட்டையைக் கொடுக்க
நான் இடது கையால் வாங்கினேன்.
அப்போது கூட
நீ உன் கஜபுஜங்களை காட்டி
ஒரு டேன்ஸ் ஆடிவிட்டுதான்
போனாய் மரத்தின் பக்கம்.
மரம் ஏறிக்கொண்டே
உன் குரலை மட்டும்
நிலத்தில் வீசினாய்
"டேய் சட்டைய கீழ வெச்சிடாத
எறும்புகளா மேயுதுங்க
மறந்தாப்புடி வெச்சுட்ட
அப்புறம் நான் செத்தேப் போயிடுவேன்"
என்று சொல்லி முடிக்கவும்
மரக் கிளையில் அமரவும் சரியாக இருந்தது.
ஆனால் நான்தான்
நீ மரம் ஏறத்துவங்கும்போதே
சட்டையைக் கீழே வைத்துவிட்டேன்
பிற்பாடு நீ சொல்லிமுடித்த தருணம்
வெடுக்கென எடுத்துக்கொண்டேன்.
பின்னர் நீ பறித்துப்போட்ட மாங்கனிகளை
ஒரு நெகிழிப்பையில் நான் நிரப்ப.
மரம்விட்டு இறங்கி
சட்டையைப் போட்ட பின்
நீ எறும்புகடியில்
கதறிய நேரத்தில்
போகும் வழியில் இருக்கிற குட்டையில்
நான் சாக முடிவெடுத்ததும் பின்பு
அந்த முடிவைக் கைவிட்டதும் வேறு கதை.
இவ்வளவு நேர
மனதின் மௌனப் பேச்சுகளை நிறுத்தி
குரல்வளை உடைத்து ஆரம்பிக்கிறேன்.
"என்னடா மாதவா நலமா" என்றதும்
அவன் ஒரு சோகப் பார்வையுடன்
தலையசைத்தான்
ஆம் என்பது போலவும்
இல்லை என்பது போலவும்.
பதிலுக்கு அவன்
"கண்ணா நீ சௌக்கியமாடா"என
கேட்பதாகவும்
"சூப்பரா இருக்கேன்டா"என
நான் பதில் சொல்வதாகவும்
கற்பனை செய்துகொண்டேன்.
அவனால் எப்படி நலம் விசாரிக்க முடியும்
உயிர் நண்பனை பலவருடம் கழித்து
இப்படியொரு கோலத்தில் பார்த்துவிட்டு.
என்னை பார்த்த முதல் நொடியில்
அவன் செத்துவிட்டான்
பிற்பாடான என் மௌனம் உடைத்த
பேச்சுகள் தானே
அவனுக்கு அளித்திருக்க வேண்டும் மூச்சு..
-நெகிழன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.