என்ன நினைக்கிறீர்கள்...?
முட்டாளென்று சொன்னான் முட்டாள்
சரியென்றேன்
இன்னும் வளர வேண்டுமென்பதாக
ஒரு கருத்தைச் சொன்னான்
அறிவாளியாக அறியப்பட்டவன்
முயற்சிப்பதாய் விடைபெற்றேன்...
நிறையக் கற்றுக்கொடுப்பதாக
அழைத்துச் சென்றவன்
இப்போது அது குறித்த
வருத்தத்துக்கு
மன்னிப்பு கேட்கச் சொல்கிறான்...
முதுகில் தட்டி அனுபவம் போதாதென்றவன்
ஒரு அரைகுறையென்று
எனக்கு அறிமுகம் கொடுத்ததற்காக
ஒரு சண்டையும் இல்லாமல்
மனம் வலிக்காமல் தான் இருக்கிறேன்
இதுவரை...
காலத்தில் உதவி செய்த ஒருவன்
எதிர்நிலையில் பிரச்சாரம் செய்த போதும்
நல்லவனென்று தான் சொல்லி வருகிறேன்...
சவக்குழியைத் தோண்டி விட்டே
எனக்கு விருந்தளிக்கிறார்கள் என்பதைத்
தெரியாமலா நான் இதில் கலந்து கொள்கிறேன்
என்று நினைக்கிறீர்கள்...!
- ஞா. தியாகராஜன், மதுரை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.