அப்பாவின் மூக்குக்கண்ணாடி

பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்தேன்
அப்பாவின் மூக்குக்கண்ணாடி
கண்மூடிய நாளில்
கழற்றியது நான்தான்...
கண்ணாடிதானே
இவனுக்கு அழகு,
எங்கே அது?
என்றும்
கண்மூடியபின்
கண்ணாடி எதற்கு?
என்றும்
சில முணுமுணுப்புகளுடன்
முடிந்து போனது
இறுதி யாத்திரை...
கண்ணாடி வரைந்தாலே
காந்தியின் படமாகிற
தேசப்பிதாவின்
நினைவுச் சின்னம் மாதிரி
என் நேசப்பிதாவின் நினைவாய்ப் போனது
மூக்குக்கண்ணாடி...
தோளுக்கு மேல் வளர்ந்தவனைத்
தோழன் என்று நடத்திய போதும்
கண்ணாடிக்குள் தெரிகிற
கண்களைப் பார்க்கையில்
மனதுக்குள் மரியாதை
மறைந்ததில்லை ஒருநாளும்...
அழுது கொண்டிருந்தாலும்
தொழுது கொண்டிருந்தாலும்
எதையாவது படித்துக்கொண்டிரு
அவர் வார்த்தைகளின் சாட்சியமாய்...
படித்துப் படித்து
தடித்துப் போயிருந்தது
அப்பாவின் மூக்குக்கண்ணாடி
அணிந்து பார்க்கையில்
காட்சிகள் கலங்கி இருக்கும்
அந்நாளில்...
இப்போது
அணிந்து பார்த்தால்
கலங்கி விடுகிறது
கண்கள் இரண்டும்...
கண்களை அடிக்கடித்
தொலைத்து விட்டுத்
தேடுவதாய்
அவர்
கவிதையாய்
சொல்கிற வேளைகளில்
கண்ணாடியைத்
தேடிக் கொடுத்து விடுகிற
என் கைகளில்
இன்றும் பத்திரமாய் இருக்கிறது...
அப்பாவைத் தொலைத்த பின்னும்...
- நிலாரவி, கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.