ஞானம்

பிரபஞ்சத்தின்
முதல் தலைமுறை...
கடல் பிளந்த பூமி
கண்டங்களாய் நின்றது...
பிரிந்து கிடந்த பூமியில்
பிறந்த மனிதகுலம்
வேறு வேறு
நிறமானது...
இனமானது...
பரிணாம வளர்ச்சியில்...
சைகைகளில் பேசியவர்கள்
மொழிகளைப் பேசினார்கள்...
உலகின் மூத்த மொழிகள் பிறந்தன.
காணும் பொருளுக்கெல்லாம்
மனிதர்கள் பெயர் வைத்தார்கள்...
காற்றைச் சுவாசித்த மனிதர்கள்
காற்றுக்கும் பெயர் வைத்தார்கள்...
கண்டங்கள் தோறும்
பேசிய மொழிகளில்
காற்றுக்கு வேறு வேறு
பெயர்கள் பிறந்தன...
மனிதனால்
காற்றுக்குத் தன்மைகள்
கற்பிக்கப்பட்டன...
பேதங்கள் கற்பிக்கப்பட்டன...
நாகரீக மனிதன்...
நீ சொல்லும்
காற்று பொய்...
நான் சொல்லும் காற்று
நிஜமென்றான்...
என் கைகள் தான் நிஜம்
உன் கைகள் பொய்
என்பது போல்...
'பேருக்கு' சண்டையில்லை...
பெயர்களுக்காய்ச் சண்டையிட்டார்கள்.
இலக்கை நோக்கிப்
பயணிக்க மறந்தவர்கள்
பாதைகளுக்காக வாதிட்டார்கள்...
வேதனையில்
வெறுத்துப் போன சிலபேர்
உன் காற்றும் அவன் காற்றும்
பொய்...
காற்றே பொய்...
காற்றை எவரும் பார்த்ததில்லை...
காற்று இருப்பதாய்
நம்புவது மூடநம்பிக்கை என்றார்கள்...
மனிதர்களின் தவறுகளுக்காக
காற்றைத் தூற்றினார்கள்...
காற்று மௌனமாய்
மனிதர்களை ஜீவித்துக் கொண்டிருந்தது...
ஞானிகளுக்குத்தான் தெரியும்
பெயர்களின் பேதங்களைக்
கடந்து
காற்றின் தன்மையே
நிஐமென்று...
- நிலாரவி, கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.