வலி தாங்குவோம்!
உளியின் வலி தாங்க
உடன்பட மறுக்கும்
கரும்பாறை சிலையாக முடியாது...
அடித்துத் துவைக்கவும்,
கசக்கிப் பிழியவும்
மறுப்புத் தெரிவுக்கும்
அழுக்காடையைச்
சலவை செய்ய இயலாது...
பிரசவ வலியைத்
தவிர்க்க நினைக்கும் பெண்களால்,
தாய்மையைச் சுவைக்க முடியாது...
வரலாற்றின் பக்கங்களில்
பதிவேற்றப் பட்ட
சீர்திருத்தங்களெல்லாம்,
சிலரின் தியாகங்களையும்
பலரின் வலிகளையும்
சுமந்தே கடந்து வந்திருக்கின்றன...
முன்னோர் நட்டு வளர்த்த
மரங்களின் கனிகளைச் சுவைக்கும்
உரிமை பெற்ற நமக்கு,
வருங்காலச் சந்ததிகள்
கனிகள் பெற மரங்கள் வளர்க்கும்
கடமையும் இருக்கிறது...
வாருங்கள்..வலி தாங்குவோம்...!
வலிமையான பாரதம் படைத்து,
வருங்கால சந்ததிகளுக்கு வழங்குவோம்...!
- ஆ. மகராஜன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.