குறள் போற்றும் குறள்
ஈரா யிரமாண்டாய் இங்கே இருந்திந்தப்
பாரைத் திருத்தும் குறள்
* * * * *
மனைமக்கள் வாழ்வதற்கே மாமொழி சொல்லும்
எனைவியக்கச் செய்யும் குறள்
* * * * *
என்னபொருள் பேச எழுந்தாலும் உள்ளத்தில்
முன்வந்தே நிற்கும் குறள்
* * * * *
பூதலம் முற்றும்போய்த் தேடினும் கிட்டுமோ
மேதகைமை பெற்றகுறள் போல்
* * * * *
சாதி மதமென்ற சாக்கடையில் தள்ளாமல்
நீதிமுறை காட்டும் குறள்
* * * * *
காதல் மொழிபேசிக் கண்ணின் மொழிசேர்த்து
மீதியெல்லாம் சொல்லும் குறள்
* * * * *
ஒன்பான் மணியாய் ஒளிரக் குறள்தரித்தே
நின்ற தமிழன்னை போற்று
* * * * *
முயற்சிக்கு முன்னுரிமை தந்தகுறள் காப்பேன்
வியப்பின் முகடெல்லை நின்று
* * * * *
பெண்ணின் பெருமை பேசுகின்ற சீர்திருத்தம்
அன்றே விதைத்த குறள்
* * * * *
வள்ளுவனோர் சீர்திருத்த வாதியென நன்றுணர்ந்தே
சொல்லுவதில் உண்டோ தடை
* * * * *
அரசியலில் அக்குவேறு ஆணிவேறு என்றே
கருத்துரைத்த நூல்வேறு காட்டு
- தாரை வடிவேலன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.