தீபாவளி... ஏதேனும் வழி?
ஊர்முற்றம் பார்த்திருக்க
(வாண)வேடிக்கை!
என் முற்றம் இருந்தது
இருளுக்கு வாடிக்கை!
ஊரெங்கும் அணிந்திருக்கப் புத்தாடை!
என் மனம் ஏங்கியது
களைந்திடக் கந்தலாடை!
அடுக்குமாடி வீடுகளில் மங்கலமாய்
அகல்விளக்கு ஒளி!
என் மண்குடிசை வீட்டுக்கு
மங்கலாய் மண்ணெண்ணெய் விளக்கு ஒளி!
வெடித்து சிதறி வெளிச்சம் தந்து
வெறித்து கிடந்தன பட்டாசு காகிதக் குவியல்கள்!
வெடிக்காத காகிதத்திற்கு
வெடிக்குமென நெருப்பு வைக்கின்றன என் கனவுகள்!
இனிப்பாய் பலகாரம்
இனம்புரியாத வகையாய் இருக்கிறது!
அரிசிசோறு தினம் தின்னும் எனக்கு
இன்று மட்டும் அம்மா செய்த
இட்லி சாம்பார் தான் இனிப்பு பலகாரமாகிறது!
மனம் கேட்கிறது மழலைக் கண்ணனிடம்!
நரகாசுரன் வதைத்தது தீபாவளி
வறுமையை வதைக்க இருக்கிறதா ஏதேனும் வழி?
-செ. சுனில்குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.