பெருமழை
மழையினால் பட்ட துன்பம்
மறக்குமோ நெஞ்ச மென்றும்
பிழையிலாத் தண்ணீர் கூட
பேயெனப் படுத்தி ஐயோ...
பழையதும் உணவா யில்லை
பட்டினி கிடந்தோ மன்று
பிழைத்ததே பெரிதா மென்றே
பெருமிதங் கொண்டோ மின்றே...
கழியினை யூன்றி மற்றும்
கயிற்றிலே நடந்தோ மன்று
வழியினை யடைத்தே யெங்கும்
வழித்தட மறந்த தண்ணீர்
குழிகளை யறிந்தோ மில்லை
குளங்களை யறிந்தோ மின்று.
பழியினை ஏற்பாய் நீயே
பாதக மழையே இன்றே...
ஆற்றினை மறந்தே மக்கள்
அள்ளினர் மணலை யன்றோ?
காற்றையு மாசா யாக்கி
காட்டையு மழித்தார் நன்றாய்
போற்றிய மரபை விட்டு
பொதுநல மின்றி யேனோ
தூற்றிடும் செய்கை செய்து
துயரினைப் பெற்றோம் நாமே...!
- மதுரா, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.