ஒரு இளம் அப்பாவின் வேண்டுதல்
சின்ன வயசிலிருந்தே
பெரிய பெரிய ஆசைகள்
நீரில்லா குளத்தில் தான்
தாமரையாய் மலர துடித்ததென்ன ??
பௌணர்மி நிலா வெளிச்சத்தில்
கயிற்று கட்டிலில் உட்கார்ந்து
நிலாச்சோறு குழந்தைக்கு ஊட்டி
மகிழ்ச்சியாய் நான் கண்ட ஜோடி
கனவல்ல நிஜம்
அந்த நிஜமெல்லாம்
என் கனவு வாழ்க்கையில்
நிஜமாக வேண்டுமென வேண்டினேன்
காலம் கடந்தது
வயதும் வந்தது
காதல் திருமணம்
கனவாய் மட்டும் போனது
சொல்லப் படாத
காதல் அத்தியாயங்கள் எல்லாம்
சோகம் தரும்
கருப்பு பக்கங்களாய் - என்
வாழ்நாள் அத்தியாயத்தில் மாறிப் போனது
செல்லாத காசு
சொல்லாத காதல் - இருந்தும்
ஏனடா
இதயத்தில் வலி ??
காலம் கடந்து போகவே
காயத்தின் ரணங்கள் எல்லாம்
வெளியே தெரியாமல்
விதி பார்த்துக் கொண்டது
பெரிய உடன்பாடு இல்லையென்றாலும்
பெற்றோர் கடமை
பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதாம்
அப்பா (இறந்த) இல்லாத பிள்ளையின்
திருமணங்கள் எல்லாம்
எப்படி நடக்குமென்று
சில சொந்தங்கள்
விரோதம் காட்டி பழி தீர்த்து
நடத்திக் காட்டியது
இதுவரை காதல் இல்லையென்றாலும்
கட்டியவளைக் காதல் செய் என்ற
முன்னோர் வாக்கை வேதமென எண்ணினேன்
காலம் தந்த வாழ்க்கையை
குழந்தை ஆசையால்
கை விட எண்ணலை
சொல்லாத சோகங்களை எல்லாம்
சோர்ந்து போன நெஞ்சத்தில் புதைத்து விட்டு
வராத காதலையெல்லாம் வா -வா என வர வைத்து
என்னவளை ஏமாற்றாமல்
விதி தந்த வாழ்க்கையில் நானும் பயணித்தேன்
என் பிறவி ஆசை
என் அடையாளத்தின் பிரதி - இப்
பிரபஞ்சத்தில் வரப் போகிறது - என்ற
பேராசையில் - எனக்கு
பிறக்கப் போகும் தேவதைக்கு
செல்லரித்து போகாத - என்
இரும்புப் பெட்டியில்
இதயபூர்வமாய்
அவன் /அவளுக்கு
பிடித்ததையெல்லாம் வாங்கி வைத்தேன்
பத்து மாசம் எப்ப முடியும் - என்
பத்திர மாசத்து தங்கத்தை
எப்போது இந்த கைகளில்
ஏந்திக் கொஞ்சுவேன் என்று
எத்தனை கனாக்கள்...?
என் கனாக்களெல்லாம்
கானலாய்ப் போக வேண்டுமென
அந்தக் கண்ணில்லாத கல்மனசு கொண்ட
கடவுள் சபித்தானோ
தெரியவில்லை ??
என் ஏஞ்சல் ஆறே மாதத்தில்
அவள் வயிற்றில் இருக்க முடியாமல்
சவமாய்-கடவுளாகி வந்து விட்டாள்
தேவதையைக் கொஞ்சி விளையாடலாம்
தேடி வந்து வதைத்துச் சென்ற
வாடிப் போன மலரை
மண்ணுக்கும்-கரையானுக்கும்
உணவாய்க் கொடுத்தேன்
அழுது -அழுது
கண்கள் சிவந்ததடா
வாழ்க்கை இத்தோடு முடிந்தால் நல்லதடா
ஏண்டா அழுவுற ?
இதோட வாழ்க்கை முடியுறது இல்லை
நீ இல்லாம
வீடு வாசல் இருந்து என்ன பயன் ??
வாஞ்சையோடு அழுது கொண்டே
என் அன்னையும் சொன்னாள்
நம்மைப் போன்ற நடுத்தரத்தினர் எல்லாம்
குழந்தை ஆசையோடு
மருத்துவமனை படி ஏறினால்
பிடுங்கும் வரை லாபம் என எண்ணுமோ
மருத்துவக் கடவுள் ?!!
மாதத்திற்கு எத்தனை முறை
மருத்துவக்கோயில் படி
துணைவியை அழைத்து சென்றிப்பேன்
என் வங்கிப் பணமெல்லாம்
வாய் இருந்தால் அழுதிருக்கும்
வியர்வை தந்த பரிசை விட
வாழ்க்கை தந்த செலவு தான் அதிகம்
எத்தனை கஷ்டம்
இந்த வாழும் வாழ்க்கை தந்தால் என்ன செய்வது??
சுற்றும் வரை பூமி
அடிக்கும் வரை காற்று
சுட்டெரிக்கும் வரை சூரியன்
நீ போராடும் வரை தான் மனிதன் என உணர்ந்தேன்
என் நகலை
என் அடையாளத்தை
எனக்குப் பிறகு
என்னைப் போல் ஒருவனை
இவ்வுலகிற்கு தந்து விட்டேச் செல்வேன்
சொந்த வீடு - புத்தகம் - குழந்தை
இந்த மூன்றையும்
படைத்து விட்டுச் செல்பவனே மனிதனாம்
யாரோ சில தத்துவஞானிகள்
சொல்லியிருக்கிறார்கள் என
தந்தை சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்
இன்னொரு முறை
குழந்தை வரத்தைத் தந்திருக்கும் கடவுளே
ஆண்-பெண் பேதமில்லை எனக்குள்
முதல் தடவை பறித்துக் கொண்டது போல்
இம்முறையும் என் செல்வத்தை
பறித்துக் கொள்ளாதே !
நீ கடவுள் என்பது உண்மையானால்
உன் மனதில் ஈவு -இரக்கம்
இருப்பது உண்மையென்றால்
என்னை வாழ விட்டு விடு
நான் என்ன பாவம் செய்தேன் ?
என்னையே ஏன் எப்போதும் வதைக்கிறாய்?
வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்
எனக்கு மட்டும் ஏன்
சோகத்தில் வாழ்க்கையைப் படைத்து விட்டாய் ??
ஒரு ஈ -எறும்புக்குக் கூடத் துரோகம் செய்யாமல்
கர்வத்தோடு வாழ்கிறேன் என்ற திமிருக்குக் கொடுத்த பரிசா?
கடவுளே
உன்னிடம் போட்டி போட உனக்கு சரி நிகர் நானில்லை
என்னை விட்டு விடு
செய்யாத தப்புக்கும்
மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்
முன் ஜென்மத்தில் ஏதேனும்
பிழை செய்திருந்தால் கூட
இரக்கப்பட்டு என்னை விட்டு விடு
நாளை பிறக்கப் போகும் மகனே /மகளே
உனக்காக காத்திருக்கிறேன்
ஜென்ம -ஜென்மமாய்
எனக்குள் ஒளித்து வைத்திருக்கும்
ஒட்டு மொத்த அன்பையும் -பாசத்தையும்
ஒரு சேரத் தரப் போகிறேன் ...
இந்த பாவப்பட்ட அப்பாவை
இந்த முறையாவது ஏமாற்றாமல்
உன் திருமுகம் காட்டி
உன் பிஞ்சு கால்களால் எட்டி உதைக்க வருவாயா ???
உன் மழலைப் பேச்சு கேட்கத்தான்
இந்தச் செவிகள் காத்திருக்கின்றன
உன் விரல் தொடும் ஸ்பரிசத்தில் தான்
இந்த உடலில் உயிர் இருக்கிறது ...
எனக்கான உலகமே நீயடா !!
நீ கருப்பா ?சிவப்பா ?
நீ ஆணா? பெண்ணா ?
தெரியாது -ஆனால்
நீ என் பிரதி
நீ என் அசல்
நீ என் வாழ்க்கை
நீ என் உயிர்
கோடி -கோடியாய்
தேக்கி வைத்திருக்கும்
ஊமை மனதின் காதலை எல்லாம்
- இரட்சகன், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.