தலைமுறைக்குப் பரிசு
எப்போதும் சிரித்திருக்க வேண்டு மென்பார்
இருக்கின்ற கவலைகள் தீரு மென்பார்
முப்போதும் முகமலரும் புன்ன கையில்
முழுதாக வாழ்வதுவே முக்தி யென்பார்
தப்பேதும் நிகழாது பகையை வெல்லும்
தருணங்கள் அதிசயமாய்த் தோன்று மென்பார்
உப்பாக அளவாக உணர்வைக் கொண்டால்
உறுதியுடன் நீடூழி வாழ லாமே
சினமதனைச் சிந்தையிலே தேக்க வேண்டாம்
சிறுமையினை மனமதிலே தூக்க வேண்டாம்
முனமிழைத்த தவறுகளை வளர்க்க வேண்டாம்
மூச்சதனில் சீற்றத்தை விதைக்க வேண்டாம்
தனக்கான நம்பிக்கை தவிர்க்க வேண்டாம்
தனிமையிலே குமைவதனை வளர்க்க வேண்டாம்
மனக்கோயில் தெய்வத்தை நினைந்து வாழ
மகிழ்ச்சிக்குக் குறைவேதும் வாரா தன்றோ.
எண்ணத்தில் நலஞ்சேர்ப்போம் என்றும் நல்லோர்
எடுத்தவழி தவறாது நடப்போம் வாழ்வில்
மண்ணுக்குள் மரமாகி மழையைச் சேர்ப்போம்
மனதார மற்றவர்க்கு நன்மை செய்வோம்
கண்ணுக்கே இமையாகும் காவல் போல
கருத்தாலே நாட்டுக்குக் காப்பாய் நிற்போம்
விண்ணோரும் காணாத வாழ்வை மண்ணில்
விதைத்திடுவோம் தலைமுறைக்குப் பரிசாய்த் தானே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.