தொலைந்து போன புன்னகை
கடந்த சில வருடங்களாவே
அவன் அதிகம் பேசுவதில்லை
சிரித்து பல மாதங்கள் இருக்கும்
யாரோடும் அதிகமாய் பேசுவதில்லை
எப்போதாவது பசித்தால் மட்டும்
சாப்பிடுவதற்கு மட்டும்
அவன் வாய் திறக்கும்
மொத்தத்தில் அவன் ஒரு உம்முனாமூஞ்சி
முன்பெல்லாம் அவன் அப்படியில்லை
கலர்கலராய் கனவு காணும்
மஞ்சுவிரட்டுக்காளை அவன்
அவன் சிரித்தால்
கன்னத்தில் குழி விழும்
அந்தக் கன்னக் குழியைப் பார்ப்பதற்கே
அவனை இன்னொருமுறை
சிரிக்க வைக்க வேண்டும் என்று தோன்றும்
எல்லோருக்கும் வரும் காதல்
அவனுக்கும் வந்து
கொஞ்சம் சாதி பெயரைச் சொல்லி
கொஞ்சம் பணம், காசு, கெளரவம் பெயர் சொல்லி
முளைத்த காதலை
முளையிலேயேக் கிள்ளி
காயம் தந்துவிட்டுச் சென்றது .
நினைத்த சிலருக்கு
மறப்பது கடினம்
நெருஞ்சி முள்ளாய்
விட்டுப் போன காதல் தைத்தது
காலம் போனாலும்
காதல் தந்த
தீராவடு போகவில்லை.
வீடு மாற்றுகையில்
என்றோ தொலைந்து போன
இறந்து போன அப்பா கொடுத்த
மணிபர்சில்
பத்திரமாய் வைத்த
பழைய காதலியின் புகைப்படம்
அலமாரியை எதற்கோ
தேடும்போது கிடைத்தது.
கிடைத்தது
அவள் புகைப்படம் மட்டுமல்ல
அவனது தொலைந்த காதலின்
நினைவுகளும்தான்
எத்தனை சோகம்
வந்து, வந்து போனாலும்
ஒரு நொடி அவள் புகைப்படம்
பார்த்த பொழுதில்
தொலைந்து போன புன்னகை
அவன் கன்னக்குழியில் வந்து விழுந்தது !!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.