பாலைவனச் சோதனை
மணல் பூத்த காடுகளில் வீசும்
அனல் காற்றில்
வெந்து தணியும் இளமை.
தனிமை மட்டுமே
எங்களுக்கு நிரந்தரம்.
இடைவிடாது துரத்தும்
கவலை
சுழலும் சக்கரம் போல
வேலை
விடியும் என்ற நம்பிக்கையில்
நாளை
இப்படித்தான்
ஓடும்நதி போல வாழ்க்கை
ஓடிக் கொண்டிருந்தாலும்
எங்கள் வாழ்க்கை
ஒருநாள் நிற்கும்
மரணத்தின் வாசலில்?!
தடைப்பட்ட ,
நின்று போன
கடிகாரம் கூட
ஒருநாளைக்கு இருமுறை
சரியான நேரத்தைக் காட்டுகிறது - ஏனோ
ஒருநாள் கூட
அந்த இறைவன்
வாழ்க்கையைப் பிடித்த மாதிரி
வைக்கவில்லை.
அந்த ஈவு இரக்கமற்ற
இறைவன் மீது கோபப்பட்டு
அவன் சாபத்திற்கு
ஆளாக நான் விரும்பவில்லை.
மண்ணில்
மண்டியிட்டு
அவனிடம் கெஞ்சிக் கேட்கிறேன்
வாழ்க்கையில் கஷ்டம் வரலாம்
கஷ்டமே வாழ்க்கையாகக் கூடாது என்றேன்
உன்னை விட்டால்
எனக்கு யாரு இருக்கா ?
உன்னைச் சோதிப்பதே
என் வாடிக்கை என்றான்
அடுத்தவர் வாழ்க்கையை
வேதனைப்படுத்தி
வேடிக்கை பார்க்கும்
இறைவனிடம்
புன்னகைத்தவாறேச் சொன்னேன்
நேசிப்பது மட்டுமல்ல
வெறுப்பதும்
ஒருவகை காதல்தான்.
கொதிக்கும்
பாலை மணலில்
தனிமையில் நின்று
கதறிச் சொல்கிறேன்
கவலையில் கூட
தோள் சாய
நிழலில்லாமல் தவிக்கிறேன்.
பாலைவனமாய்
வாழ்க்கை போனாலும்
சோதிக்கும் உன் பரிட்சையில்
தேர்ச்சி பெறுவேன் என்ற
நாளைய நம்பிக்கையின் பற்றுதலோடு
உன்னை நேசிக்கிறேன் - ஏனோ
இப்போதெல்லாம்
அந்த இறைவன்
முன்பை விட
அதிகம் வெறுக்கவில்லை !!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.