தொலைந்தவன் தேடுகிறேன்…

இதயத் தோழமைகளுக்கு ...
வணக்கம்
என்னைத் தெரியுமா உங்களுக்கு…
நான் தொலைந்து போனேன்
நீங்களாவது...
என்னைக் கண்டுபிடியுங்களேன்...
குறுகிய உருவம் கலைந்த கேசம்,
அன்னை முத்தமிட்டதற்கு
அடையாளமாய் தாடி - இவை
என்னை அடையாளப்படுத்துபவை...
என்னைக் கண்டுபிடியுங்களேன்…
எப்படித் தொலைந்தேன் ...
நண்பர்களில் கரைந்து
போயிருக்கலாம்
காதலில் காணாமல்
போயிருக்கலாம்
முத்தெடுக்கும் முயற்சியில்
மூழ்கியிருக்கலாம்…
கை கோர்த்துக் கொண்ட
காதலுக்கு காவலாய்
நின்றிருக்கலாம்...
ஒரு வேளை
நண்பர்களின் தோளில் ஏற்றி
இறக்கிவிடப் படாமல்
இருக்கலாம் …
எதுவாயினும் என்னைத் தேடுங்கள்...
பேருந்து நெரிசலில்
புகையில்
கலைந்து போயிருக்கலாம் ...
வாய்க்கால் வழியோடிய
மீன்களில் ஓடியிருக்கலாம்...
(எதுவாயினும் )
சாப்பிடும் போது
கவனமாயிருங்கள்
நீங்கள் அருந்தும்
கடைசிக் குவளைத்
தண்ணிரிலும் கலந்திருக்கலாம் ...
உங்கள்
மூச்சின் தும்மலாய்
இருக்கலாம்
கனவனமாகத் தும்முங்கள்
பார்க்கும் இடங்களில்
உற்றுப் பாருங்கள் -உங்கள்
பார்வையாகக் கூட
நானிருக்கலாம்...
(எதுவாயினும் )
நூலகங்களில்
நூல்களைக்
கவனமாகப் புரட்டுங்கள்
நீங்கள் படிக்கும்
புத்தகத்தின் அடுத்த
பக்கமாகக் கூட
நானிருக்கலாம் ...
சாலை மருங்கில் ...
தேனீர் நிலையத்தில் ...
திரையரங்க வாயிலில் ...
கோயில்களில் ...
பூங்காக்களில் -இவற்றில்
எதிலும் இல்லையென்றால்
ஆளுயரக் கண்ணாடியில்
உங்களைப் பாருங்களேன் ….
ஒருவேளை
உங்கள் இதயத்தில்
ஒட்டியிருக்கலாம்...
(எதுவாயினும் )
என்னைத் தேடுங்கள்…
- புலவர் இரா. முரளி கிருட்டினன், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.