கடவுள்கள் எங்கே...?

போகிறப்போக்கில் ஒருவர்
‘பரந்தாமா’ என்கிறார்
சாமானியன் எனக்குள்ளே
பா[ர்க]டலொன்று எழுகிறது….!
கடையக்கடைய அமுதத்திலே
விசம் பிரித்து
தொண்டையில் நிறுத்திவிடும்
ஆதிசிவன்
பூமியில் கொடிய செயல்கள்
உருமாறும் போதே
ஓடி வந்தள்ளிப்பருகி அதேத்
தொண்டைக்குள்
நிறுத்தியிருக்கலாமே….!
பிட்டுக்கு மண் சுமந்த
பிறைசூடன்
தன் ஆழ்ந்த உறக்கத்திலே
ஏற்ற தாழ்வு கதறலுடனே
மானுட வாழ்வு சுழன்றிருப்பதை
மறந்தே போனானோ…!
ஒரு குரல் அழுகைக்கே
ஓடோடி வந்த
அம்பிகையவள்
கைவிடப்பட்ட குழந்தைகள்
அவலங்கேட்ட பிறகும்
பசுக்காம்புகள் தேடியெந்த
கோசாலையில் காத்திருக்கிறாளோ...?
‘ம்...’
அடுத்தொருவர்
‘தேவனே…’ என
அவரிட்ட சிலுவையில்
என் கை ‘பைபிள்’
ஏக கனக்கிறது….!
தேவதூதர்கள் பார்வையில்
ஆசிர்வதிக்கப்பட்டு
பாவங்கழுவப்பட
ஒருவரேணும் படவில்லைபோல்
அங்கேயும் அல்லேலூயாவில்
துயரவாடை வருகிறதே…
சிலுவையில் அரையப்பட்ட ஏசு
உயிர்தெழுந்ததென்பது
பிதா மகாக்களை காக்கத்தானென்ற
உத்திரவாத ஜெபம் என்னாயிற்றோ...?
‘ம்...’
இன்னொருவரின்
தொழுகைக்கு பின்னான
‘அல்லா’ முனக்கமதில்
அருளாளர் கருணைத்தேடல்
நான் பிரித்த குர் ஆன் பக்கம்
என்னகம் திருப்புகிறதே….!
அல்லாஹ் இறையச்சம்
உள்ளவர்களே என்றாலும்
எதன் பொருட்டு இணக்கமாகி
நம்பிக்கைக் குனிர்வுகளை
நிமிர வைத்திருக்கிறாரோ நபிகள்…!
’ம்...’
காக்கும் கடவுட்கள்
எங்கு போனார்களோ என்ற
வினாவுக்கான விடை
அவரவராட்கள் பிரித்தலிருப்பதாய்ச்
சொல்லாது சொல்கிறதோ
ஆலயங்கள் கதவடைப்பு...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.