புதிது புதிதாய்..!
புதிது புதிதாய் பிறந்திடுக பெண்மையே
பழமைப் புலன்களின் பொறுமை மாற்றிட
புதுமையில் வேகமெடுத்து எழுந்தோடி
புரட்சிப் புயலில் முன்னேறி வா தொடர்ந்து!
எதிர்கொள்ளும் அநீதிக்கெல்லாம் இனி
அறியாமை அழுகையெல்லாம் கூடாது
நேற்றைய இருளின் விடியல் இன்றிலே
நாளைய நோக்கம் உயர்ந்த செயலாய்
சமூக வெளியே உணர்த்திட வா துணிந்து!
பூப்போன்றவள் உவமை எதற்கென அதை
பொய்யான சருகுகளாய் ஒதுக்கித்தள்ளி
நெருப்புக்குள் பூக்கும் நீர் குமிழிகளென்று
எங்கெங்கும் வளம்வரவே வா சிலிர்த்து!
தலைதாழ்ந்த பேசுதலுக்கே யுகம் கடந்து
வீடுகளில் மறைந்து அமுங்கிக் கிடந்தாய்
விழிப்புணர்வான தன்நிகர் முனைப்பிலே
வீதியிறங்கிய வீருநடை தொய்வில்லாது
காலத்தில் உறுதி கொண்டு வா நிமிர்ந்து!
கட்டுப்பாட்டில் புதைந்து கிடந்த விதையே
உலகத்தளத்தில் சரிநிகராகிய விரிச்சமே
தன்னையே செதுக்கியவள் அடையாளமே
மேன்மைத்தரம் உச்சம் தொட்டு விடவே
நேர்கொண்டே இன்னும் வா கனன்றுருந்து..!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.