லட்சியமாய்க் கொள்வோம்!

ரௌத்திரம் பழகு என்ற பாரதி
எங்கள் உள்ளத்தில் விதைத்தான்
கேள்வித் தீ
பெண்களை ஒருத்தியை, ஒருத்தியாக
நினைக்கா விட்டால்
பெருந்தீயாக மாறி விடுவாள்
கற்புக் கனலாகயிருப்பாள்
தன்னையும் காத்து ,
கணவனையும் காத்து
கணவரின் உறவினர்களையும்
காப்பாள்...!
பெண் அழகிய பூ
சிந்திக்கும் போது மனம்
தாமரையாய் விரியும்.
சிரிப்பில் முல்லைப் பூ
அன்பில் அவள்
மகிழம் பூவாய் மகிழ்வாள்.
தீமைகளைக் கண்டால்
புயலாய் மாறி விடுவாள்.
பெண்ணிற்குப் பாலியல் தொந்தரவு
எனும் போது வாள் ஏந்தத் தோன்றும்.
கரண்டி ஏந்தும் கரம்,
கையில் போர்க்கொடி தூக்கும்.
நரம்பு புடைக்கும்.
இரத்தம் தலைக்கு ஏறும்.
பெண்கள் புதுமை எனும் போர்வையில்,
கலாச்சாரம், பண்பாடு
நம் பழைய நாகரிகம்
மறக்கப்பட்டுவிட்டது.
நம் பாரம்பரியம்.
காக்கப்படவேண்டும்.
நிதி சேர்ப்பதில்
நாம் உயர்ந்து நிற்போம்.
நீதிக்காகப் போராடுவோம்
மலருக்குள்ளும் பூகம்பம் உண்டு.
அமைதிக்குப் பின்னால் ஆபத்தும் உண்டு.
சிரிப்பிற்குப் பின்னால் சோகமும் உண்டு.
மனதில் அளவற்ற ஆசையும் உண்டு.
அதன் பின்னால்
நெருப்பால் சுடும் வடுவும் உண்டு.
பெண்ணே,
தற்காப்புக் கலை அவசியம்.
இராணூவத்திலும் பெண்கள்,
நாட்டின் கண்கள் பெண்ணே,
நீ நெற்றி கண்ணை திறந்தால்,
அநீதியும், சமூக கொடுமைகளும்
மாண்டு போகும்.
பெண்ணே,
உண்மைக்காக உயிர்ப்புடன் போராடு!
சோதனைகள் மற்றும் வேதனைகளைக்
கடந்து மனவலிமை பெறுவோம்!
சாதனைகள் படைப்பதை
வாழ்வின் லட்சியமாகக் கொள்வோம்!
- கவிஞர் லலிதா ஷ்யாம், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.