அகமதுக்கோர் அன்பு மடல்!

பாசத்தின் உறைவிடமே
சுடர் முகனே
நேசம் நிறைந்த நண்ப(க)னே
அகமதே வணக்கம்
அன்பின் இணக்கம்
எப்படி நலமா?
குடும்பம் சுகமா?
***
குசலம் விசாரிச்சும் - நாம
கொண்டாட்டம் வச்சும்
கலை நிகழ்ச்சி செஞ்சும்
கனநாள் ஆயிடுச்சே - எல்லாம்
கலவரத்தால் நீடித்திச்சே!
***
ஆர்ப்பரிக்கும் கடலாகக்
குமுறிக் கொக்கரிக்கும்
என் குரலை - சீர்பூட்டி
ஏர்பூட்டி அனுப்புகின்றேன்
என் நிலத்தை குலத்தை உழுதுவிட்டு...!
***
"இருதயத்தின் ஈரிதழ்போல்
இந்து முஸ்லிம் இனங்கள்
யாம் ஒரு வயிற்றுப் பிள்ளைகளாய்"
- புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை
செப்பினாரே... சொல்லிவிடு!
***
என் அம்மாவோ
பிட்டு அவிச்சாளே
உன் அன்னையோ
பிட்டுக்குத் தேங்காய்
துருவினாளே
ஒன்றோடு ஒன்றவை
கலந்திடுச்சே நம்ம இனவுறவும்
அதுக்குள்ளே சேர்ந்திடுச்சே...!
***
அந்தா பாரு அநியாயம்
அரங்கு ஏறுதே
காய்த்த மரத்துக்குக்
கல்லெறியும் பொல்லெறியும்
விழுகுதே ஐயையோ
பூவோடு பிஞ்சும்
உதிர்ந்திடுச்சே
நம்ம பிறந்த மண்ணில்
நட்ட மரம் உடைந்திடுச்சே!
***
நான் யாரு நீ யாரு
அவன் யாருடா?
நற்றமிழின் அகமதுவே
இதைக் கேளடா
'பெருவிரல்' , 'சின்னி விரல்'
வாதம் மிஞ்சுதே
ஒருதாய் பிளைகளென்ற
பாடம் புகட்ட எழுந்து நில்லடா!
***
பகவத் கீதை கேட்டாயே
அனுப்புகின்றேனே
திருக்குர்ஆனை எனக்குடனே
அனுப்பி வைப்பாயே
பரிசுத்த வேதாகமமும்
படித்துப் பார்ப்போமே
திரிபீடகத்தினையும் இனித்
திறந்து பார்ப்போமே!
***
இந்தா பாரு அகமதுவே
வீதி விபத்தினை
சுகந்தபாலவும் மரியதாசும்
இரத்தம் சிந்துறார்
கண்ணீர் சிந்திப் பயனில்லை
தூக்குவோம் வாடா
கடுகதியில் கொண்டு
செல்வோமே ஆசுபத்திரிக்கடா...!
***
ஒன்றே குலம் ஒருவனே
தேவன் படிச்சிடுவோமே
உலகினுக்கும் பாடம் புகட்ட
விரஞ்சிடுவோமே
முகம்மது தந்த அகமதுவே
முடித்துக் கொள்கிறேன் மடலை
அனுப்பு நீயும்
படித்துச் சுவைக்கிறேன்!!
- விவேகவெளி தமிழேந்திரன், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.