சுதந்திரதேவி வருத்தம்!
வருத்தமேன்
சுதந்திர தேவி
அந்தந்தாண்டின் நீ
அழுதுவிடும் கண்ணீரில்
சனநாயகமென்பதெல்லாம்
மூழ்கடிப்பது வழக்கம் தானே….!
நிறைய
எதிர்பார்ப்போடுதானே
இடம் மாறிவந்தாய்
சற்றேனும் குறையில்லாமல்
நாங்களே பாவங்களானோம்….!
இனியும்
எங்களைப் புதுப்பிக்க
இதயத்தில் கருணையில்லை
ஏகமான சுயநலம் எங்கும்
படிமமாகிப் போனதே….!
அடிமைச்
சங்கிலியை வெட்டிட
நீ கொடுத்தந்த
ஒற்றுமைக் கோடாரியில்
வேற்றுமை விஷம் தடவி
எங்களுக்குள்ளேயே
கொத்தி வதைபடவே
தயாராகிப் போனோம்….!
எல்லோரும்
சமமாயிருக்க நீ
உரிமைகள் சொன்னாய்
தவறான புரிதலில்
ஊருக்கு வன்மத்தின்
பொறியில் வசமானோம்….!
இன்றைய
தேசம் இப்படியெல்லாம்
இருக்க வேண்டுமென்று நீ
எத்தனை கனவு கண்டாய்
நாங்கள்தான் தூங்காத
சதிச்செயல்களில்
விழித்தே இருக்கிறோம்….!
வருத்தமேன்
சுதந்திர தேவி
நம்பிக்கை வைக்கலாம்
எப்படியாவது
மனிதமுள்ள மனிதர்களாய்
முயற்சி செய்கிறோம்...!
- காயத்ரி மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.