தமிழா நீ தாய்த்தமிழைத் தாங்கு!
வாளெடுத்து வீரஞ்சொன்ன தமிழிது – யாரது
தாளெடுத்துக் கோப்பால் மறைப்பது?
வாழ்விதனில் ஒன்றான மொழியிது – வாராது
சூழ்ந்திடும் துயரெப்படிக் களைவது?
புல்லர்களால் அழிக்காது காத்திடு – தமிழைப்
பல்லாயிரம் மூத்ததென நிறுவிடு!
அங்கமெலாம் தமிழ்க்குருதி ஓடுது! – அதனைச்
சிங்கமென நீயுரக்கப் பறைந்திடு!
தமிழனெனத் தனியில்லை சாற்றிடு – எங்கள்
தமிழாலே தமிழரானோம் மறுப்பெது?
குமிழாகப் பன்மொழிகள் அருகிடும் – எங்கள்
தமிழென்றும் அழியாது உணர்த்திடு!
மொழியே வாழ்வுவழி அருளியது – அதையும்
பிழிந்துவிட்டு நாமெங்கு வாழ்வது?
இழிமகனென தமிழன்னை சொல்லாது - இன்றும்
பழியுனக்கு வாராது நின்றிடு!
விழிப்போடு தடையுடை காலமிது - வெல்லும்
வழியாக்கி தமிழாலே நிமிர்ந்திடு!
தமிழையே தலையாக்க வேண்டும் - என்றும்
தமிழாநீ தாய்த்தமிழைத் தாங்கு!
- மாலதி இராமலிங்கம், புதுச்சேரி..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.