அந்தக் கைக்குட்டை
விட்டுச் சென்றதை
எடுத்துப் பார்த்தேன்
உன்னுடையக்
கைக்குட்டையாயென்று.
எடுக்கும் முன்னே
உணர்ந்து கொண்டேன்
உன் வியர்வை நறுமணத்தை
உணர்ந்தவன் என்பதால்.
யாரோ, நானென்று
அலட்சியத்தால்
தொலைத்திருக்கலாம்.
கைக்குள் இருப்பது
சிறையென்று அவை
எண்ணியிருக்கலாம்.
இல்லை,
எண்ணியதோடு நில்லாமல்
தப்பிக்க குத்திருக்கலாம்.
குதித்ததில் காயமடைந்து
சாலையோரத்தில்
கேட்பாரற்றுக்
கிடைந்திருக்கலாம்.
இவையெல்லாம் நடந்திருக்கலாம்
நடக்காமலும் இருந்திருக்கலாம்.
யாருக்குத் தெரியும்
அந்தக்
கைக்குட்டையைத் தவிர,
இப்பொழுதும்
அந்தக் கைக்குட்டையோடே
அங்குதான் இருக்கிறேன்.
பருவங்கள்
மாறி மாறி வருகிறது
ஆனால்,
யாரும் வரவில்லை
எங்களைத் தேடி.
- துங்கன், பா.கொத்தனூர், மாளிகைமேடு (அஞ்சல்), வேப்பூர் (வ), கடலூர் (மாவட்டம்).

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.