இயற்கையின் பரிசு
வண்ணங்களைப் பூசியபடி
வலம் வரும் பட்டாம் பூச்சியை
பிடிக்க விழைகிறாள்.
அகப்படாது தப்பிக்கும் வித்தையை
நேர்த்தியாய்க் கற்று வைத்திருக்கிறது
பட்டாம்பூச்சி.
பட்டாம்பூச்சி படபடக்குமழகும்
அவளின் இமையசைவும்
போட்டி போட
அவளின் இமையசைவிற்கே
முதற்பரிசு.
அவள் ஒவ்வொரு வண்ணமாய்
அள்ளிப் பூசியதில்
வண்ணங்களற்றுக் கிடக்கிறது
வானவில்.
பட்டாம் பூச்சிப் பிடிப்பதில்
அவள் தோற்றுப் போயிருப்பினும்
மொத்தமாய் பூக்காடினை
அவளுக்கு பரிசளித்தனுப்புகிறது
இயற்கை ...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.