சமத்துவம் பொங்கும் கவிக்கோ
கவி என்றால்
காகிதத்தில் எழுத்தல்ல,
காற்றில் முளைக்கும்
விதை, கனவு, கதை;
முப்பரிமாண மந்திரத்தில்
விளங்கும் அரசன்தான் கவி.
அதனால்தான் உனக்கு
“கவிக்கோ” என பட்டம்
தந்தார்களோ?
நீ மனிதனின் நெஞ்சுக்குள்
எட்டிப்பார்த்து,
அவரது மனஅலைகளை
ஒலி போல உணர்ந்து,
பிரச்சினைகளின் வேர்
மண்ணுக்குள் தொட்டு பார்க்கின்றாய்.
அரங்கத்தின் நடுவே-
சில முதலாளிகள்
ஒட்டுக் கண்கள் போட,
சிலர் சிரித்து பார்வை வீச,
சில அரசியல்வாதிகள்
முரட்டுத்தனத்தின் புகை விட்டபடி
குரல் கத்த,
காவல்துறை
கூட்டத்தைச் சிதறச் செய்ய,
சமூக ஆர்வலர்கள்
குரல் கொடுத்து கொழுந்தெழ,
நீ மட்டும்
அமைதியான அலைபோல் எழுந்து
உன் சிந்தனையை முன்வைக்கிறாய்.
“சமூகத்தை மாற்றுவோம்” என்று
சமூகப் போராளியாக
நின்று கொண்டிருக்கையில்-
வானம் கருமையாய்
கைக் கட்டி நின்றது;
மேகங்கள் இரும்புக் கோட்டைகளைப் போல
சுமந்து வந்து,
மழை-
முழக்கம் நிறைந்த பாடலாய்
பொழிந்து விழுந்தது.
வெள்ளம் கொந்தளித்து
தெருக்களை தம் ஆடையாக்கி
ஓடியது;
அது உயர்ந்தவன்-தாழ்ந்தவன்
என்று பிரிக்கவில்லை;
அனைவரையும்
ஒரே கரத்தில் கட்டி
இழுத்துச் சென்றது.
அந்த வெள்ளம்
உன் காதில் கிசுகிசுத்தது:
“எல்லோரும் சமம்.”
அதுவே
நீ எழுதும் கவிதையின்
மூச்சாக மாறி,
சமத்துவம், மனிதநேயம்,
ஒற்றுமை-
எல்லாம் மன அலைகளாய்
உன் வார்த்தைகளின் வழியே
வெள்ளமாய் பொங்குகின்றன.
- முனைவர் ச. சேவியர், இராசிபுரம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.