இனி இறப்பின்றி பிறப்பில்லை
உன்னை நாடி வந்த
ஒருவரையும்
வெறும் கையோடனுப்பாதே!
தேவையென்று வந்தவராயினும்
அன்பை அணிகலமாய்க் கொண்டு
அரவணை.
நச்சென்று சொற்களை வீசாதே
நயமாய் நல்வார்த்தைகள்
நாலுரை.
இன்முகம் இனிதே காட்டு
இறுமாப்பு
வேண்டாமுனக்கு.
தூக்கி வைத்து கவிழ்க்காதே
காலி குடமென்று நினைக்காதே
உள்ளே காற்றுள்ளதை மறவாதே!
கல்மனமென்று- நீ
கற்பனைக் கொள்ளாதே
பூமனமென்றே புன்னகை புரி.
மலையளவு கேட்டாலும்
உள்ளதைப்பேசி
கடுகளவேனும் கொடுத்தனுப்பு.
நீ - எதை
எடுத்து வந்தாய்
நீ கொண்டுப்போக.
ஒருவன் பங்கை ஒன்பதாக்கலாம்
ஒன்பதும் ஒருவனுக்கு
அதிகம் தானே!
வந்தவன் நண்பனானாலும்
மனம் நொந்து போனால்
நீ வீழ்ந்து போவாய்
நீ வீழ்ந்து போவாய்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.