கடத்தியின் இரசவாதம்
எப்பொழுதும்
போல
சிரித்துவிட்டு
கடக்க முடியாமல்தான்
இருக்கிறது
பேசிய
வார்த்தைகள்
அதன்
அர்த்தங்களில்.
கடந்து போன
வாழ்வின்
முகமறியாது
கைபேசியில்
கழித்த
பொழுதுகளில்
நாம் பேசிய
அதே வார்த்தைகள்தான்.
அதே
நேரமும்தான்.
அக்கடையில்
தேநீர் பருகிய பொழுதும்தான்.
எக்காரணமென
அறியேன்
சூழும்
அசௌகரியத்திற்கு.
வார்த்தைகள்
சுமந்து வந்த
சோர்வினை
எனக்குள்
இறக்கிவிட்டதை.
மறுதலிக்காமல்
மறுமுறை சொல்லிவிடு.
பேசிய
நீயும் நீயல்ல.
இப்பொழுது
எழுதும்
நானும் நானல்ல.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.