அது ஒரு காலம்
அன்று -
விடிந்தாலும்
அந்தி மறைந்தாலும்
கனவிலும் நனவிலும்
அப்பாவின் நினைவு மட்டுமே…
இன்று -
பாரமாகச் செல்கிறது
ஒவ்வொரு விடியலும்…!
அன்று -
எதிர்காலக் கனவில்
தந்தையின் அரவணைப்பில்
தினம் தினம் இன்ப ஊற்று…
இன்று -
வாழும் வாழ்க்கையே
நிதர்சனமாகாமல்
கானல் நீராக…!
அன்று -
படிக்கும் படிப்பும்
உங்கள் முகம் காட்டி பரிகாசம் செய்தது!
இன்று -
படிப்பு தந்த வேலையில்…
காந்தி முகம் மட்டுமே பிறா் கண்ணில்…
உங்கள் இதழோரப் புன்னகையைத் தேடுகிறேன்…
அண்டப்பெருவெளியிலே…!
அன்று -
எழுதும் எழுத்திலும்
தீட்டும் ஓவியத்திலும்
அப்பா உங்கள் பெயர் மட்டுமே!
இன்று -
யாரையோ அழைக்கிறார் என்று செல்கிறேன்...
என் பெயரெனத் தெரியாமல்….!
அன்று -
வலித்தாலும் அழுதாலும் விம்மினாலும்
அம்மா!அம்மா!
என்ற சொல் தவறியும் வாராது
வாய்மொழியில்…
அப்பா! அப்பா! என்று
பிரசவத்தின் போதும் கதறிய வலியின் ஓசையின்பம்…
இன்று -
அப்பா என்றழைத்திட
காற்றில்… காணாத உலகில் தேடுகிறேன்….
அன்று -
மௌனமொழியை செம்மொழியாக்கப் போராடினேன்
ஏனெனில் நம் உறவு வளர்ந்தது மௌனமொழியாலே!
இன்று -
வாழ்வில் பேரமைதியே!
மொழிக்கு என்றும் விடுமுறை
என் நடைமுறை வாழ்வில்!
அன்று -
உங்களுக்காகவே என் விடியல்!
இன்று -
நீங்கள் இல்லாமலே
நீங்கள் சென்ற பாதையின் வழியில்…
அப்பா!
அது ஒரு காலம்
இன்று காலாவதியாகிற்று…
- முனைவா் நா. கவிதா, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.