மனிதாபிமானம்
என் நண்பனைச் சந்திக்கப் போகிறேன்.
பார்த்துப் பல ஆண்டுகள்
ஆகிவிட்டது.
என் நினைவுகளைப் பசுமைகளாக்கி
எதையெல்லாம்
பேசவேண்டுமென்று நினைத்தேனோ
அதையெல்லாம்
மீண்டும் மீண்டும்
அசைபோட்டுக் கொள்கிறேன்.
அதற்கு
அவனுரைக்கும் சுவையான
பதில்கள் குறித்தும்
மகிழ்வாய் அசைபோடுகிறது மனம்.
இத்தனைக் காலப்பிரிவில் இருந்தவன்
ஏதோ பேச்சுக்கு அமரச்சொல்கிறான்
பேசிக்கொள்ள நேரமற்றவனாய்
இரண்டொரு
வார்த்தைகளுக்குமேல் பேசவில்லை.
பாசம் நிறைந்த விழிகளுக்குள்
சுகமாய் விழவேண்டியவன்
விழவில்லை.
என் மனைவி மக்களைப்பற்றி
அவன் விசாரிக்காத போதிலும்
நானே வலியச்சொல்கிறேன்.
நான் எண்ணிச்சென்றதும்
எதிர்ப்பார்த்துப் போனதும்
துளியுமில்லை அவனிடத்தில்.
காலநீட்சியில்
வறுமைப் பற்றியிருக்கும் என்னை
உரிமையோடு அவன் தோளில்
கைப்போட அனுமதிக்கவில்லை.
ஏங்கித் தவிக்கும் அன்பை
அனுபவிக்கத் தெரியாமல்
வாடா போடா எனும் நட்பின்
தார்மீக உரிமைகளை
வெறுத்தொதுக்கி
மரியாதை நிமிர்த்தங்கள்
நிறையவே எதிர்ப் பார்க்கிறான்.
பழைய சினேகம்
அறவேயில்லை அவனிடத்தில்.
உணர்வுமிக்கவளாய்
அவன் மனைவி
மிகவும் விசாரிக்கிறாள்.
உடன் பிறந்தவளின் அதே பாசத்தோடு.
உள்ளே போனவன்
கொஞ்சம் பணத்தைக் கொண்டுவந்து
என் கையில் திணிக்கிறான்.
நான் அவனிடம்
பணம் கேட்டோ
வேறு உதவி கேட்டோ
போகவில்லை என்பதை
அவன் அறியவில்லை போலும்.
அவன் நட்பைப் பார்த்தோ
என் மீது அவன் கொண்டிருக்கும்
மனிதாபிமானம் பார்த்தோ
பணம் கொடுப்பதாய்த் தெரியவில்லை.
என் வறுமையை ஏளனம் செய்யவும்
அவன் அந்தஸ்த்தை நிரூபிக்கவும்
பணம் கொடுக்கிறான் என்பதை
முழுமையாய் உணரமுடிந்தது
அவன் செயல்களில்.
அவ்வேளை
அவனைப் போடா போ
என நிராகரித்து விட்டு
அவன் அந்தஸ்த்தை
தூக்கியெறிந்து விட்டு
என் நட்பையும்
என் அன்பையும்
சிதைக்காமல் அப்படியே கொண்டுவந்தேன்
என்பதைத் தவிர
என் மனைவி மக்களிடமும்
உங்களிடமும்
என் நண்பனைப் பற்றிச்சொல்ல
என்னிடம் பெரிதாய்ச் சேதியொன்றுமில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.