தாமதத் தவிப்பு
ஏதாவது எழுதவேண்டும் என்று
எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்.
காத்திருந்த பூனை
காலடியில் படுத்தது.
இதற்கு மேல் முடியாதென்று
பல்லிகள் துரத்தலில்
ஈடுபட்டது.
நிலவை மேகங்கள்
மறைத்தது.
தலை மேல் இருக்கும்
மின் விசிறிக் கூட்டில்
குருவிகள் கண் அயர்ந்துவிட்டது.
நான் விடாமல்
அந்த வார்த்தைகளை
தேடிக் கொண்டிருந்தேன்.
நல்லிரவின்
பிற்பகுதியானதால்
அவைகளும்
தூங்கி விட்டன போலும்.
அவைகள்
விழிக்கட்டுமென
நான்
காத்துக் கொண்டிருக்கிறேன்.
கடவுளே...
விடிவதற்கு முன்
அவைகள்
விழிக்க ஏதோவொரு
உபாயம் செய்து விடு
உனக்குப்
புண்ணியமாய் போய்விடும்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.