முகம்
நான்
கேட்டுப்பெறாததை
நான்
தருவதாய்ச் சொல்லியும்
அதை
என்னிடம்
யாருமே கேட்கவில்லை.
அதை
நான் கொடுக்க வேண்டிய
கட்டாயமுமில்லை
நீ பெற்றுக் கொள்ள வேண்டிய
அவசியமுமில்லை.
இப்போது...
அதை
நான் கொடுக்க நினைக்கிறேன்
நீ தேவையென்று
வரும் சமயம்
என்னால் கொடுக்க வியலாமல்
போகலாம்.
நான்
கொடுக்க வரும்
தருணத்திலேயே
நீ பெற்றுக்கொள்வது
உத்தமமென்று நினைக்கிறேன்.
நீ கேட்ட பிறகு
நான் கொடுக்க
அது தர்மமாகிவிடும்
நீ கேட்காமல்
நான் கொடுக்க விழைவது
உனக்கு நான்
வலிய திணிப்பதாகும்.
முடிந்தால்
உனக்கு விருப்பமிருந்தால்
பெற்றுக்கொள்
அதை
நான் கொடுப்பதற்கு
யாருடைய அனுமதியும்
எனக்குத் தேவையில்லை.
அது
என் முகமாக
என்னிடமே இருக்கும் பட்சத்தில்
எனக்கொன்றும்
வருத்தமுமில்லை
சிரமமுமில்லை தோழனே.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.