வேணாம் நமக்கெதுக்கு வம்பு!
ஷீலா -
அக்கா அலமே(லு)!
அறிஞ்சேன் ஒருசேதி;
நிக்காமப் போனா
நியாயமா? – ஒக்காந்தால்
கூறுவேன் காதில்;
குறிப்பறிந்து கொண்டாயேல்
சேருமே ஊர்காதில்
சென்று!
அலமேலு -
அப்படி என்னடி
அந்தரங்கம்? என்னிடம்
ஒப்புவி ஊரே
உனைவணங்கும்; – இப்பநான்
போய்ப்பார்க்க வேறு
பொழப்பில்லை; உன்னுடைய
வாய்பார்த் திருக்கேன்
வழங்கு!
ஷீலா -
கூத்தப்பன் பேரன்
குமர குருவுக்கும்
காத்தாயி பேத்திக்கும்
காதலாம்; – ஆத்தோரம்
நாணலாம்; ஊரார்
நடமாட்டம் ஓய்ந்தபின்
காணலாம் லீலை
களாம்!
அலமேலு -
சீவி மினுக்கிச்
சிலுக்கு நடைநடந்து
தேவிவரும் போதே
தெரியுமடி; – நாவிதமாய்ப்
பேசி எவனாச்சும்
பேதலிக்க வைப்பான்னு;
போய்சிக்கிட் டாளாஅப்
பொண்ணு!?
ஷீலா -
அம்புவிட்டுக் கண்ணை
அலையவிட்டுப் பெண்ணவளை
நம்பவச்சுப் பின்னால்
நழுவிட்டான்; – நம்மஊர்
தெக்கால வீதி
சிவனாண்டி சின்னமவன்
முக்காலும் சோலி
முடிச்சு!
அலமேலு -
அவனுக்கு முன்னால்
இவனா? இரண்டோர்
தவறுமே செய்யா
தவனா? - அவள்கெட்டக்
கேட்டுக்குக் காதல்
கிறுக்கல்கள் ரெண்டா?ஊர்
நாட்டுக்குள் இஃதா
நடப்பு?
ஷீலா -
அறிஞ்ச வரைசொன்னான்
அக்கா! அடநான்
அறியா ததையா
அளந்தேன்? – நெறிமறந்தும்
காணாத ஒன்றைக்
கதையாத் திரிப்பேனா?
வேணாம் நமகெதுக்கு
வம்பு!
அலமேலு -
அலர்பேச நாமதான்
ஆளா? அதுக்குச்
சிலருண்டே ஊரிலே
ஷீலா! – குலசாமி
கும்பிட்டுப் பார்ப்போம்
குடும்பத்தைப் போகையிலே
எம்புட்டுப் போறோம்
எடுத்து!?
- அகரம் அமுதா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.