காதல் வந்த மாயம்
எப்போதும் பார்க்கின்ற
நிலா என்றாலும்
அழகாகத் தெரிகிறது
இப்போது.
தம்பி சாப்பிட்டதைப் பற்றி
என்றும் கேட்டதில்லை.
கேட்கத் தோன்றிற்று
கேட்டும் விட்டேன் இன்று.
அப்பா வீட்டிற்கு
தாமதமாக வருவது குறித்து
பவ்யமாக வினவுகிறேன்
அம்மாவிடம்.
தங்கைக்குப் பிடித்ததை
வாங்கித்தர
ஏங்குகிறது மனம்.
அடுக்களையில்
அம்மாவுக்கு உதவிட
சலிப்பில்லை கொஞ்சமும்.
பாட்டி சொல்லும்
கதைகளை வெறுப்பின்றி
கேட்கப்பிடிக்கிறது செவிசாய்த்து.
தாத்தாவின் உடல்நலனில்
அக்கறையும்
கூடுதல் கவனிப்பும்
கூடியிருக்கிறது முன்பைவிட.
எல்லாம் என்னுள்
காதல் வந்த மாயமெனில்
அது-மிகையாகாது...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.