ஏ. பி. சே. அப்துல்கலாம்
(அறுசீர் விருத்தம்)
இந்திய நாட்டின் ஆற்றல்
எங்குமே வியக்கச் செய்தார்.
முந்தியே முழங்கி வானில்
முகவரி ஒளிரச் செய்தார்.
வந்தனை செய்தே வாழ்த்தி
வணங்கியே வியந்து நின்றோம்.
சந்ததி தமிழர் வாழ்வில்
சரித்திரப் புகழாய்ப் பூத்தார்.
விண்வெளிப் பயிற்சி கற்றார்.
விரைந்திடும் ஆற்றல் கொண்டார்.
கண்வழி காணும் யாவும்
கருத்தொடு செயலாய்க் கண்டார்.
மண்புகழ் மாந்தர் போற்ற
மனிதமே கற்றுத் தந்தார்.
பண்பெழில் பூக்கும் நல்லார்.
பணிவினை வாழ்வில் காத்தார்.
தொழில்களின் நுட்பம் கற்றார்.
தோழமை இளையோர் என்றார்.
வழியென வாழ்வைக் காட்டும்
வற்றிடா முயற்சி என்பார்.
பழியிலாக் கடமை செய்தார்.
பக்தியும் காத்து நின்றார்.
விழியினில் கனவை வைத்தார்.
வியன்றிடும் நனவாய் சேர்த்தார்.
விருதுகள் பலவும் வென்றார்.
வியந்திடப் பணிவும் காத்தார்.
கருவென மனதில் நாட்டை
கற்பென காத்தார் மேலார்.
மருவிலா மன்னர் ஆவார்.
மறுத்தவர் சுகமும் சொத்தும்.
விருந்தென மாளிகை சென்றும்
விரும்பியே தவிர்ப்பார் மச்சம். (மாமிசம்)
- குமுதினி இரமணன், வவுனியா, இலங்கை (தற்போது யேர்மனி)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.