நடப்பு
இருபத்துநான்கு மணித்துளிகள்
கொண்டவொரு பெருநாளில்
சில நிமிடத்துளிகள்
சிரிக்கலாம் என்றிருந்தேன்.
அப்போது வந்த
துயரச்செய்தியொன்று
என் மகிழ்ச்சிப் பொழுதைக்
களவாடிச் சென்றது.
தொலைக்காட்சித் தொடரில்
நண்பர்களுடன், மனைவியுடன்,
பிள்ளைகளுடன்
சிரிக்கலாம் என்றிருந்தேன்.
அப்போதொரு
அழுகைச் செய்தி வந்து
அபகரித்துச் சென்றது.
பின்பொருநாள்
கதறியழலாமென எத்தனித்தேன்.
அவசர அவசரமாய்
வந்த துயரச் செய்தி
வழக்கம் போல்
எனது அழுகையை மகிழ்ச்சியென்று
பிடுங்கிச் செல்ல;
இதுதான் சந்தர்ப்பமென
நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த மகிழ்ச்சி
இன்று வரையில்
இருந்து கொண்டிருக்கிறது.
தற்போது
சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.