அழகு மங்கை
பயிலாத நடைபயிலும் அன்னப் புள்ளே
பருவத்தின் கவின்கொஞ்சம் வண்ணக் கிளியே
துயிலாத இரவாக்கித் துடிக்கச் செய்து
துவண்டுமனப் பெருமூச்சில் துவளச் செய்தாய்
குயில்குரலில் மொழிசிந்தும் இளமைத் தேனே
குற்றால அருவிபொழி குளிர்மை மானே
வெயில்தரையில் புழுவாகத் தீயச் செய்து
வெறுப்பெல்லா பொருள்மீதும் பொழியச் செய்தாய் !
கொய்கின்ற கனிகளுக்குக் காம்போ பின்னால்
கொய்யாத உன்கனிக்குக் காம்போ முன்னால்
நெய்யாத பட்டுடலில் தாக்கிக் குத்தி
நெய்கின்றாய் காமத்தை நெஞ்சில் தைத்து
பொய்கையிலே துள்ளாத கயலால் ஏக்கப்
பொருமல்கள் துள்ளியெழ மாரன் வில்லில்
எய்திட்டாய் மலர்கணைகள் ! மேனி தன்னை
எரிக்கின்ற விறகாக்கி எரியச் செய்தாய் !
கார்முகிலின் இடையொளிரும் மதிமுகத்தில்
கண்சிமிட்டும் மீன்எழிலை இதழில் தேக்கிப்
போர்க்களமாய் என்நினைவில் புகுந்து கொண்டு
பொழுதெல்லாம் கனவுகளில் மிதக்க வைத்தாய்
சீர்அணியில் சிறந்திருக்கும் வெண்பாப் பெண்ணே
சிலையழகை விஞ்சுகின்ற வனப்புக் கண்ணே
பேர்கொழிக்கும் உடலழகில் திகழுகின்றாய்
பெயர்ந்துவரும் பளிங்குபோல ஒளிர்கின்றாய் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.