இணை
மாடிப்படியில்
எறுகின்ற தோரணையில்
நின்று கொண்டிருக்கிறது
வெகு நேரமாய் பெயரிடப்படாத
கவிதை யொன்று.
படியில் ஏறுபவர்கள்
அதைக் கைப்பிடித்து அழைத்தும்
உடன் ஏறமறுக்கிறது.
வயோதிகத்தின்
அவதியோயென
வலியத் தூக்கிவிட
முனைகின்றனர் பலர்.
ஒருவர்க்கும் இசைவதாயில்லை
அக்கவிதை.
புனைந்த கவிஞனே
அந்தக் கவிதையை
புறந்தள்ளியிருப்பானோயென
எண்ணுகிற வேளையில்...
தன் வரிகளின் வாசத்தை
எங்கும் தூவியபடி
காற்றில் மெல்லப் பறந்து
பயணிக்கத் தொடங்குகிறது.
இக்கவிதையை
இணைசேர்த்தபடி...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.