இன்னொரு புரிதல்
கலைந்து கிடந்த
உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்
எனக்குள் நிதானித்து.
எப்படி இருப்பினும்
வாகாய்ச் செதுக்கித்தான்
அடுக்கி வைத்தேன்
பொறுமையின்
சாந்தத்தில்.
அறியாமையின்
பதிவுகளில்
கலைத்துவிட்ட
பாங்கினை
யாதொன்றும்
சொல்வதற்கில்லை
நான்
கசிவது உதிரமானாலும்.
இரக்கத்தின் எல்லாக் கதவுகளையும்
உடைத்துவிட்டு
ஓடிவிட்ட
உனக்காக
கதவுகளற்றுக் காத்திருக்கிறேன்
யாவையும்
புறந்தள்ளியவனாக
புரிதலுக்குட்டுத்தும்
பொறுப்புகள்
மேவிக் கிடப்பதால்
ஒன்றுனக்குத் தெரியுமா
முன் நாளின் பொழுதுகளில்
நான் வீடழித்தக் கொடும்பாவி
மேலான உனக்கு முன்.
எஞ்சிய கணங்கள்
யாவிலும்
உனக்கானக் காத்திருப்பானது
இவ்விருத்தலென
நீ
அறியும் தருணம்
சிந்தும் கண்ணீர் துளிகளில்
வியாபிக்கும்
பாந்தம்
நேற்றைகளில்
எனக்கொருவர்
கரிசனத்தில்
இட்டதுதான்
இணைவதன் பிரவாகத்தில்
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.