நீ என் தாயாகிறாய்...!
உயிருக்கான ஆன்மாவின்
ஒற்றைப் பிடிப்பு
தனித்த தேடுதல் கடந்த
சரணாகதி உருவம்
அனைத்தின் பிரதிபலிப்பு
உயிர்ப்பூவை
மலர வைக்கின்ற அன்பு
தனியாய்ச் சிந்திக்க
அவசியமற்ற
என் உயிரின் பிரதி
இல்லை
இந்தப் பிரதியின் உயிர்
அணுவின்
அசைவே ஆன்மா எனில்
எனது அணு நீ...
ஆன்மாவின் தேடலே
அனைத்தும் எனில்
என் அனைத்தும் நீ...
அணுவையும்
ஆன்மாவையும்
கடந்தது அன்பெனில்
எனதன்பு மகளே....
நீயே
என் உள்ளீடற்ற ஜீவிதத்தின்
உட்பொருள்
என் வாழ்வின்
அடுத்தடுத்தப்
பரிமாணங்களில்
நிறைவடையாமல்
சிதறிக் கிடக்கும்
எச்சங்கள்
உன் இலக்கினைத்
தொடும் போதெல்லாம்
முழுமையை உணர்ந்து
மீண்டும் மகிழ்வாய்ப்
பிறக்கின்றன
உன் சிறு பாதம்
தொடவுள்ள
அடுத்த இலக்கினைக்
காண...!
மகளே
என் கருவறையின் நிறைவே
வாழ்விற்குப் புத்துயிர் தந்து
நீ என்
தாயாகிறாய்.
- முனைவர் ம. தனப்பிரியா, கோயம்புத்தூர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.