அசௌகரிய விடுவிப்பின் புரிதல்
கேள்விகளுக்கு விடையளிக்காமல்
அதனோடு தூங்கப் பழகினேன்
படுக்கையின் மென்மை வலிகள்
கூட்டியது.
திடுக்கிட்டெழுந்த விழிப்பில் சூழ்ந்த
வெறுப்பில் துலாவி எடுப்பதெல்லாம்
கேள்விகளாகவே இருந்தது.
இதற்கு முன்பாக பழகியதுதான்
என்றாலும் இருளுக்குள் அச்சப்பட
வைக்கும் ஏதாவது இருந்து கொண்டே
இருந்தது.
நான் பிடித்த முயலுக்கு எந்தனைக்
கால்களாவது இருந்துவிட்டுப்
போகட்டும்.
இருளுக்குள் விளக்கேற்ற
எவருமில்லாத பொழுது முயலைத்
துரத்திவிட நினைக்கிறேன்.
மனம் ஏதோவொன்றை நிறுவ
முயல்கிறது.
பகலுக்குள் சிக்கிவிட்ட எலியின்
கூண்டை எவர் திறப்பாரென்பது
இரவிற்குள் சிக்கிவிடும் எதற்கும்
தெரிவதில்லைதான்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.