பெருந்தொற்றுக் காலம்
அவசர சிகிச்சைப் பிரிவின்
படுக்கையை மாற்றும்
பணிப்பெண்ணாய்
வெளியேறத் துடிக்கும்
உயிரைக் கூட்டுக்குள் அடைக்க
விரையும் விரைவூர்தியின்
வாகன ஓட்டியாய்
திறக்காத கடைகளிலிருந்தும்
சலிக்காத மனத்தோடு உணவிட்டு
நடைபாதை நாயகரை
மீட்டெடுக்கும் சேவகனாய்
கவச உடைக்குள்
உடலை ஒப்புவித்து
இரண்டாம் இறையாய்
நோயின் பிடி விடுத்து
மறு பிரசவிக்கும்
மருத்துவனாய்
மன அழுத்தச் சிறைக்குள்
சுழன்றாடும் மனிதத்தை
உலகின் கரத்தில்
மழலையாய் மாற்றிடும்
ஆறுதல் வார்த்தையாய்
எனை மாற்று இறைவா.
பெருந்தொற்றுக் காலத்தை
பேசாமல் கண்மூடிக் கடக்கும்
பிரியமில்லை மனமே!
- இளையவன் சிவா, நரசிங்காபுரம், திருப்பூர் மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.