என் உயிரானவள்
பொருட்பிழையற்ற
மனதின் சொற்கள்
சொற்பிழையோடு
உதட்டில் பிரசவிக்கின்றன...
பார்வையில்
சுவையேறிய
உணவினை
உணர்வதில்
பிறழ்வு...
ஆம்
கொதி நீர் ஊற்றி
சற்றே வெந்து போனதும்
இதுவரையில்லாமல்
விழித்திருக்கும்
பொழுதெல்லாம்
மனதின் மத்தியில்
மையம் கொண்டு
சுழன்று தன்னை
உணர்த்திக் கொண்டே
இருக்கிறது நாக்கு...
ஆம் மகளே
கவனக்குவியலாய்
மாற்றத்தில் உணர்கிறேன்
உனதிருப்பை முழுவதுமாய்...
ஆனால்
நீ எனதுடலுறுப்பு
மட்டுமல்லவே.....
கீறல் விழுந்த விரலில்
தனதிருப்பைக் காட்டிக்
கசியும் குருதி போல்
பிரிவில் மனதில்
எனதுயிரான
உனது நினைவு.
- முனைவர் ம. தனப்பிரியா, கோயம்புத்தூர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.