காத்துக் கிடக்கலாம்..!
போர்க்களம்
கொஞ்சம் காலம்
அமைதியாக இருக்கலாம்…
சிதைவுகள் அகற்றிட
தன்னார்வமாக ஏதோ
முன் வரலாம்
ரத்தம் சிந்திய இடங்களில்
பன்னீர் தெளித்தும்
வாசனை திரவியங்கள்
பூசப்பட்டும் விடலாம்
மாண்டவர் புதைகுழியில்
வாழைக்கிழங்கு பதியமென்றால்
வாழையடி வாழை நல்லதெனலாம்
உடல் சிதறல்
கிடக்குமிடங்களில்
மலர் தாவரங்கள் நட்டு
வளர்ந்து வருகையில்
பட்டாம் பூச்சி, தேனீக்கள்
வந்தமர்ந்து சிறகு விரித்து
செல்கையில் சிலவேணும்
தேன் துளிகள் சிந்தியிருக்கலாம்
கூடுகளின்றி புறாக்கள்
எங்கும் பறந்து திரிந்திட
உரிமை தந்த பிறகு
வேண்டிய இரையெடுத்து
சுதந்திர வெளி சுவாசத்தை
தடையின்றி முகர்ந்திடலாம்
மழைத்துளிகள் விழுந்த நிலத்தில்
ஈரப்பதமது பரவினால்
அதுவே நாளைய மாற்றம்
என்றாகலாம்
மனிதர்கள் துடைக்கப்பட்டதும்
ரகரகமான ஆயுதங்கள்
துருப்பிடித்து மண்ணோடு
துகள்களாகும் போது
ஒரு வெற்றிடமான
பூமித்திட்டெங்கும்
ஏதோ ஒன்று
காத்துக்கிடக்கலாம்!
- காயத்ரி மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.