கடவுளுக்குக் கடிதம்?
மழைமேகம்
திரண்டிருந்தது
கும்மிருட்டு
குளிர்காற்று
உடலைத்
தாக்கிற்று
ஆளரவமற்ற வீதி
ஓவியம் வரைவதைப் போல்
வரிகளை செதுக்குகிறேன்
தேவாலய மணியோசை
சன்னமாகக் கேட்கிறது
இன்னொருவர் ஏறிப்போகும்
படிக்கல்லாகத்தான்
இருக்க முடிகிறது
இன்று வரை
சாட்சியாக இருந்து
உலகைப் பார்த்தேன்
கோட்டி பிடித்துவிட்டது
என்றார்கள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாதிரி
இருப்பதால்தான்
இங்கு வாழ முடிகிறது
கடிதம் எழுத
உட்கார்ந்தேன்
கடவுளுக்கு நான் எழுதும்
நூறாவது கடிதம் இது
ஒரு கடிதாசி கூட
திரும்பி வந்ததில்லை
கடவுளும் பதில்
அனுப்பியதில்லை
மனிதன் சிருஷ்டித்த
கடவுளை
உடுக்கையடித்து
எழுப்ப முடியுமா?
- ப. மதியழகன்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.