இனி நீயே கதையெழுது...
பிரிவைப் பற்றி
நாம் கதைத்தால்
நீ அழுதிட முன்பே
உன் கண்களில் நீர் வடியுமே
அதை மறந்து போனாயா..?
உன் வார்த்தைகளை
நேசித்தேன்-
அது தெரிந்தும் நீ
சொற்களில் ஏன்
முட்களை வைத்தாய்..?
உன் நிழலாக
நானும்
என் நிழலாக
நீயும்
தொடர்ந்ததை தான்
மறந்து போனாயா?
தொடர்கதை தான்
எழுதுகிறாயா?
நீயும் ஒரு
தூரத்து “மை”ப்போத்தலா..?
ஆறாம் விரல் தந்தாய்
அதனாலா?
இல்லை
இனி நீயே கதையெழுது
இதோ
வந்துவிடுகிறேன்
ஒரு கருவாக நானும்…
உன் கதைக்குள்
உருவாக..!
அழுதாலும்
அழவேண்டும்
உன்னைப்போல்!
சிரித்துக்கொண்டே…
நீ அழுதாலும்
நீர் வரும்
சிரித்தாலும்
நீர்வரும்
எப்போது அழுதாயோ
உண்மையாக!
உனக்காக
வெள்ளைத் தாள்கள்
வானம் நிறைய…
இனி
நீயே கதையெழுது
விரைவாக…
பனிக்காற்றில்
உன் வார்த்தை
பூப்போல
பறக்கட்டும்
சிறக்கட்டும்
ஜொலிக்கட்டும்!
- சம்பூர் சனா, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.