மகாத்மாவே
மகாத்மாவே
அஹிம்சை விதைகளை இங்கே
வரமாக தருக...
அக்டோபர் இரண்டில்
எல்லோர் மனதிலும் பதியமிடட்டும்
எப்போதும் நம் தேசம்
சகிப்போடு தழைக்கட்டும் !
சாலையில் பெரும் விபத்து
தேனீர் விடுதி தொலைகாட்சியில்
கிரிக்கெட் பார்க்கின்றனர்...
எதிர் வீட்டில்
கொள்ளையடிக்கப்படுகிறது
தம் வீட்டில் விளக்கணைத்து
எப்போதோ உறங்கிவிட்டதாக
பாவனை செய்கின்றனர்...
நகரின் ஒரு பகுதியில்
குண்டெறிந்து
வன்முறையாளர் சூரையாடுவார்
வேடிக்கைப் பார்த்த ஆளில்
சேதாரம் எவ்வளவு என
விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்...
இரவில் தனியாகப் போனவள்
கயவர்களால் மானபங்கப்பட்டு
கதறியழுகிறாள்
ஊர் மைதானத்தில்
கண்ணகி பற்றிய
பட்டிமன்றத்தில் முழ்கியிருக்கின்றனர்...
வறுமையின் பிடியில்
வேலைக்குப் போனால்தான்
வீட்டில் உலை கொதிக்கும் நிலையில்
விருப்ப நடிகரின் பிறந்தநாள் வசூல்
தலைவனின் கட்சிக்கு நிதி சேர்ப்பு என
மும்முரமாயிருக்கின்றனர்...
முரண்பாடுகள் கோர்த்த
பூ மாலையில் வாசமில்லைதான்
ஆனாலும்
நிஜங்களின் வாழ்க்கை
இப்படித்தானே...
- பாரதியான், ஆர்.ஆர்.நகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.