வெளிச்சம் தேடும் பார்வை
குருட்டுப் பிச்சைக்காரனுக்கும்
தட்டில் விழும் காசுக்கும்
சம்மந்தமில்லை
கோயிலா,கடைத்தெருவா என
அவனுக்குத் தெரியப்போவதில்லை
பேருந்துகளில் கையேந்துகையில்
அவனுடைய சாரீரத்துக்குத்தான்
சில்லறை விழும்
பார்வையை பறித்துக் கொண்ட
கடவுள் மீது
அவனுக்கு இன்னும் நம்பிக்கை இருப்பது
ஆச்சர்யம் தான்
உலக இயக்கத்தின் மீது
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டு வருவதில்லை அவன்
புற இருளை அகற்றிட
தன்னையே தீப்பந்தமாக்குகிறான்
சாலையைக் கடக்க உதவிடும்
சிலரால் தான் பூமியில்
மனிதம் பிழைத்திருக்கிறது
மனிதனின் இரக்கத்தில் தான்
அவன் பிழைப்பு ஓடுகிறது
யாசகம் வேண்டி நிற்கும் அவனிடம்
கருணை உள்ளம் கொண்டு
கண்ணொளி கிடைக்கச் செய்யும்
மனிதர்களால் தான்
அவன் வெளிச்சத்தை
சுவாசிக்க முடியும்.
- ப. மதியழகன், மன்னார்குடி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.