அந்த ரகசியம்
எங்கள் இருவருக்கும்
மட்டும் தான் தெரியும்
அந்த ரகசியம்
அது வெளிப்படாதவாறு
அதன் சிறகுகளை
முறித்துவிட்டிருந்தோம்
அது கசியாதவாறு
ஐஸ்கட்டி போன்று
இறுகச் செய்திருந்தோம்
அது அம்பலமாகாதவாறு
மனதை பூட்டி வைத்திருந்தோம்
தற்செயலாக போட்டு
உடைத்துவிடுவோமோ என அஞ்சி
வார்த்தைகளை வடிகட்டி
பேசிக் கொண்டிருந்தோம்
ரகசியம் பிறர்
அறியப்படாமல் போக
நாங்கள் இருவரும்
இல்லாமல் போக வேண்டும்
என முடிவெடுத்து
எங்களை நாங்களே
கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டிருந்தோம்.
- ப. மதியழகன், மன்னார்குடி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.