கூண்டிலேயே இரு!
பித்தாய்ப் பின்னே சென்று காதலித்து
முத்தாய் மணத்தில் முடிந்ததும்
மனதை விட்டு மறந்து போகிறது காதல்
காலப்புயலில் சிக்கி கவிழ்ந்து
போகிறது கல்யாணக் கப்பல் இங்கு .
யுகமாய்த் தவமிருந்து ஏங்கி ஏங்கிப்
பிள்ளை பெற்றதும் ஆசையாய்க் கொஞ்சியதும்
போய் பின், படி என்றும் முதலிடம் பிடி என்றும்
அன்பு மறந்து குழந்தையும் குழந்தைத்தனமும்
இங்கே கொல்லப்படுகிறது!
கட்டிய மனைவி போல் கடைசி வரைக்கும்
இருக்கும் கவர்மென்ட் வேலை கசக்கிறது
பாடுபட்டுக் கிடைத்த கணினி வேலையும்
வேறு நிறுவனம் கட்சி மாறினால் அயல் நாட்டு
யோகம் வாய்க்குமே என்று வீணாசை காட்டுகிறது!
ஒன்று கிடைக்கும் போது இருக்கும் ஆசை அது
கிட்டியவுடன் இருப்பதில்லை ..அதன் அருமை
உணர்வதில்லை... அதனைத் தன்னிடத்திலே தக்க
வைக்க முல்வதில்லை ..... எல்லாம் மறந்து விடுகிறது
கையில் இருக்கும் கனி என்றுமே ருசிப்பதில்லை நமக்கு!
வாய்ப்பு கிட்டியதற்கும் கிட்டாததற்கும் உள்ள இடைவெளியில்
நாம் காணாமல் போகிறோம் ... பேராசை என்னும்
பெருங்கடலில் தொலைந்து போகிறோம் ....மலையேறி சிகரம்
தொட்ட பின் வானம் தொட்டு என்ன ஆகணும் ?
கடல் மூழ்கி முத்தெடுத்த பின் நிலவு தொட்டு என்ன செய்யணும் ?
- ஷிரவாணி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.