நண்பனுக்கு ஒரு மடல்
அன்பு நண்பா !
உணர்வோட்டத்தின் நடுவே
உயிரோட்டத்தின் வழியே
தெறிக்கின்ற புதிர்கள்
தவிக்கின்ற உள்ளம்.
ஓடி விட்ட காலத்தினுள்
ஒதுங்கி விட்ட உண்மைகள்
ஓரமாய் நின்று ஏனோ
ஓங்காரப் பெருமூச்சு
தவழ்ந்திருந்த பொழுதினிலே
தாய் அந்த அரவணைப்புக்குள்
நான் கண்ட உலகத்தில்
கண்டதில்லை ஓர் துன்பம்
வியாபார உலகமடா !
விற்பனைக்கு மனிதரடா !
விலையாக உண்மையைத் தர
வியாபாரிகள் இல்லையடா !
முகிழ்க்கின்ற முயற்சிகளுக்கு
முத்தாய்ப்பு வைக்கும் கூட்டம்
முறிந்து போன சந்தர்ப்பங்கள்
முடிந்து போன ஆரம்பங்கள்
பொருளாதாரம் எனும் சிக்கலுக்குள்
பொருளில்லா மனிதர் தமை
பூட்டி வைத்து அழகு பார்க்கும்
புதுமையான உலகமடா
மாண்புமிகு மகத்துவங்களை புவியில்
மரணிக்கும் மட்டும் வாழ்ந்து காட்டி
மறைந்து போன மனிதர்களை
மறந்து வாழும் நவயுக மாந்தரடா
அவசரமாய் ஓடுகின்ற இந்த
அர்த்தமில்லா அவல வாழ்வில்
அதோ ...... ஒரு சிலர் மட்டும் பாவம்
அப்பழுக்கில்லாமல் வாழுகின்றார்
நெஞ்சத்தில் குமுறும் ஓசையில்லா
எரிமலையில் வடியும் தீக்குழம்பில்
எழும்பும் வினாக்களுக்கு நண்பா உன்னிடம்
எதிர்பார்க்கவில்லை விடைகளை
என் நெஞ்சத்து உணர்வுகள்
உன் உள்ள வாய்க்கால் வழியாக
ஓடித் தணிக்கட்டும் வெப்பத்தை
ஓய்ந்து போகுமா ? இல்லாமை
அப்போதாவது ?
- சக்தி சக்திதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.