கவிஞன்
மொழியால்
முல்லைச் சரம் தொடுப்பான்
இருளை
வரிகளால் கிழிப்பான்
மாயத்திரை அகற்றி
ஞான தரிசனம் பெறுவான்
தமிழை மழையெனப் பொழிவான்
எழுதுகோலால் ஓவியம் வரைவான்
கற்பனையில் சிறகடித்துப் பறப்பான்
இறுமாப்புடன் வானை வம்புக்கிழுப்பான்
கனவில் கூட கவியாகவே
நடமாடுவான்
வாழ்க்கை நதியில் எதிர் நீச்சலடிப்பான்
இயற்கையின் பேரழகை கண்டு வியப்பான்
தமிழுக்கு மகுடம் சூட்டி
களிநடனம் புரிவான்
இலக்கியத்தில் ஊறித் திளைப்பான்
பாரதி போலவே நடப்பான்
இனத்துக்கு இழுக்கு நேர்ந்தால்
விஸ்வரூபம் எடுப்பான்
காவியங்கள் பல படைப்பான்
காதலில் சிக்கித் தொலைப்பான்
பித்தனாய் சுற்றித் திரிவான்
எழுத்தில் சித்தராய் தவம் புரிவான்
என்றும் விலை போக மாட்டான்
தன்மானத்துக்கு தீங்கு நேர
விடமாட்டான்
தீக்கனலாய் என்றும் தகிப்பான்
கவிச்சுடராய் ஒளிவெள்ளம் தருவான்
தாயை தெய்வமாக மதிப்பான்
பெண் உரிமைக்காக குரல் கொடுப்பான்
அவன் வாழும் காலங்களில்
நலம் விசாரிக்காதவர்கள்
இறந்த பிறகு
சிலை வைப்பார்கள்.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.