பூக்களைப் பூக்களாகப் பாருங்கள்!
பூக்களைப் பூக்களாக
பார்த்து இருக்கிறீர்களா
வண்டுகளைப் பாருங்கள்
தேன் அருந்திவிட்டு
தள்ளிச் செல்கிறது
அய்யோ மனிதர்களே
அழகான எதைக் கண்டாலும்
தனது உடமையாக்காமல்
விட மாட்டீர்களா நீங்கள்?
வைகறையில் பூக்கள் பாடும்
தேவ கானம் கேட்கவில்லையா
உங்களுக்கு
இதழ்கள் உள்ளங்கையை விட
மென்மையானவை
அதை எப்படி கசக்க மனம்
வருகிறது உமக்கு
மனிதா நாலு பேருக்காக
நல்லவனாக நடிப்பவன்
தானே நீ
கண்டு ரசித்து மகிழ
யாருமில்லை என்பதற்காக
காட்டிலுள்ள மொட்டு
மலரமாட்டேன் என்கிறதா
காம்புகளை உடைப்பது கூட
வன்முறை தான்
இயற்கையின் பேரழகை
நீ ஏன் கெடுக்கிறாய்
மலர்களின் நறுமணத்தை
உன் நாசி முகரவில்லையா
காற்றின் தாலாட்டில்
மனிதன் தூங்கலாம்
மலர்கள் தூங்குமா
காலையின் பூபாளத்தை
கேளுங்கள்
வண்டுகளின் சங்கீதத்துக்கு
செவி கொடுங்கள்
இனியாவது பூக்களைப்
பூக்களாகப் பாருங்கள்.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.