மர்மம்
திசைகளின் நடுவே
காணாமல் போனேன்
மற்றவர் கண்களுக்கு
அகப்படாத மாய உருவானேன்
காற்றெனை சுமந்து
ககன வெளியில் சென்றது
மனோவேகத்தில்
நிலவைத் தொட முடிந்தது
சொப்பனமாக கண்டவற்றை எல்லாம்
நிறைவேற்றிக் கொண்டேன்
மானிடனாய் இருக்கும் போது
பீடித்த பீழை நோய் அகன்றது
அண்ட பேரண்ட ரகசியமெல்லாம்
மெல்ல மெல்லப் புரிந்தது
தேவதைகள் எனக்கு ஏற்பட்ட
சந்தேகங்களை நிவர்த்தி செய்திட
முன்வந்தன
சாத்தானைச் சந்தித்து கைகுலுக்கினேன்
கடவுளைவிடவும் நல்லவனாக
இருந்தான் சாத்தான்
எனது வருகையைப் பற்றி விசாரித்தான்
மாய உலகின் சட்டதிட்டங்கள்
மர்மமானவைகளாக இருந்தன
சட்டத்தை மதிக்காமல் நான் நடந்ததால்
மீண்டும் மனிதனாக பிறக்கக் கடவாய் என
சாத்தானால் சபிக்கப்பட்டேன்
சில நொடிகளில்
ஒரு பெண்ணின் கருவிலுள்ள
சிசுவுக்குள் நுழைந்தேன்
இருள் பழக்கமான ஒன்றானது
வெளிச்சம் பற்றி கற்பிதங்கள்
இறுதிவரை இல்லாமல் போனது.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.